மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் விழா.. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
உற்சவ அம்மனுக்கு பலவித பூக்களைக் கொண்டு நாகபூஷணி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.;
மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.. அதன்படி ஆடி மாதத்திற்கான அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
உற்சவ அம்மனுக்கு பலவித பூக்களைக் கொண்டு நாகபூஷணி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் காட்சி அளித்தார். இரவு 11 மணியளவில் உற்சவ அங்காள பரமேஸ்வரி அம்மன் பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளினார். பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர். அம்மன் ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து இரவு 12.00 மணியளவில் தாலாட்டு பாடல் பாடி அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பித்தவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது. பின்பு அம்மன் உட்பிரகாரத்துக்கு சென்றார். இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம் திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் புதுச்சேரி, பெங்களூர் ஆகிய இடங்களிலிருந்தும் மேல்மலையனூருக்கு சிறப்பு பஸகள் இயக்கப்பட்டன.