காவேரிப்பாக்கம்: சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர திருவிழா

ஆடிப்பூர திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், தீச்சட்டி ஏந்தி வழிபட்டனர்.;

Update:2025-07-28 16:54 IST

ராஜ அலங்காரத்துடன் காட்சியளித்த சிவகாளி அம்மன்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி அருகே சித்தஞ்சி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பூர பெருவிழா நடைபெறும். அவ்வகையில் இந்தாண்டு ஆடிப்பூர பெருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் சிவகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்ன.

ஆடிப்பூர நாளான இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளம், பம்பை உடுக்கை முழங்க சிவகாளி சக்தி கரகத்துடன், காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக சென்றனர். பக்தர்கள் எடுத்து வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் சிவகாளி சித்தர் பீடம் மோகனந்த சுவாமிகள் உலக நன்மைக்காகவும், இயற்கை வளம் செழித்திடவும் சிறப்பு பிரார்த்தனை நடத்தி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதனையடுத்து பல வண்ண மலர்களால் அலங்கரித்து ராஜ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்த சிவகாளி அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்