உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருது: ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
புதுடெல்லி,
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உயரிய கேல் ரத்னா விருதுக்கான பட்டியலில் பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப்பதக்கம் வென்று வரலாறு படைத்த அரியானா வீராங்கனை மனு பாக்கர், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இளம் வயதில் சொந்தமாக்கி சரித்திரம் படைத்த தமிழக வீரர் குகேஷ், ஒலிம்பிக் ஆக்கியில் இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக வெண்கலம் வென்றதில் முக்கிய பங்கு வகித்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்ட உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரவீன்குமார் ஆகிய 4 பேர் இடம் பெற்றிருந்தனர்.
கேல் ரத்னா விருதுக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டு பட்டயமும் வழங்கப்படும். விருது வழங்கும் விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். அத்துடன் அவருக்கு பாராட்டு பட்டயமும் வழங்கினார்.
மேலும் மனு பாக்கர், ஹர்மன்பிரீத் சிங் மற்றும் பிரவீன்குமார் ஆகியோருக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கேல் ரத்னா விருது வழங்கி சிறப்பித்தார்.