மகளிர் ஆஷஸ் ஒருநாள் தொடர்: இங்கிலாந்தை ஒயிட்வாஷ் ஆக்கிய ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
ஹோபர்ட்,
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த தொடரின் முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி ரன் குவித்தது. இங்கிலாந்து பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன் குவித்த ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னர் 102 ரன்களும், தஹ்லியா மெக்ராத் 55 ரன்களும், பெத் மூனி 50 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து 309 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீராங்கனை மாயா பவுச்சியர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து கேப்டன் ஹீதர் நைட் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கை கோர்த்த டாமி பியூமாண்ட் - நாட் ஸ்கைவர் பிரண்ட் அரைசதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இருப்பினும் நாட் ஸ்கைவர்-பிரண்ட் (61 ரன்கள்), டாமி பியூமாண்ட் (54 ரன்கள்) இருவரும் ஆட்டமிழந்ததும் இங்கிலாந்து மீண்டும் சரிவை சந்தித்தது. பின்வரிசையில் டேனியல் வியாட் ஹாட்ஜ் (35 ரன்கள்) மற்றும் ஆமி ஜோன்ஸ் (30 ரன்கள்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
42.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து 222 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் ஆக்கியுள்ளது.
ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங் 5 விக்கெட்டுகளும், மெகன் ஸ்கட் 3 விக்கெட்டுகளும் மற்றும் ஜார்ஜியா வார்ஹம் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். கார்ட்னர் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டி20 தொடர் வரும் 20-ம் தேதி தொடங்க உள்ளது.