தொடர் தோல்வி எதிரொலி: இந்திய அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்


தொடர் தோல்வி எதிரொலி: இந்திய அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்
x

image courtesy: AFP

இந்திய அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி சமீப காலங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 27 ஆண்டுக்கு பிறகு தாரைவார்த்தது. அதன் தொடர்ச்சியாக சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் மோசமாக தோற்றது. அத்துடன் ஆஸ்திரேலியாவில் நடந்த அந்த நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் தோற்று 10 ஆண்டுக்கு பிறகு பார்டர்- கவாஸ்கர் கோப்பையை இழந்தது.

இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பும் பறிபோனது. இந்த தொடர்களில் இந்திய பேட்ஸ்மேன்களின் தடுமாற்றமே தோல்விக்கு மிக முக்கியம் காரணம். இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர்தான் பேட்டிங் பயிற்சியாளர் பணியை கவனித்தார். ஆனால் அவரது செயல்பாடு திருப்திகரமாக இல்லை. எனவே இந்திய அணிக்கு பிரத்யேகமாக ஒரு பேட்டிங் பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக இந்திய 'ஏ' அணியின் தலைமை பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் நியமிக்கப்பட்டுள்ளார். வருகிற 22-ந்தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடருடன் அவரது பதவிக்காலம் தொடங்குகிறது.


Next Story