இந்திய சுற்றுப்பயணத்திற்கான விசாவை பெற்றார் சாகிப் மஹ்மூத்


இந்திய சுற்றுப்பயணத்திற்கான விசாவை பெற்றார் சாகிப் மஹ்மூத்
x

Image Courtesy: AFP

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. தொடரில் முதலில் டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன. டி20 ஆட்டங்கள் முறையே கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட், புனே, மும்பை மைதானங்களிலும், ஒருநாள் போட்டிகள் நாக்பூர், கட்டாக், அகமதாபாத் மைதானங்களிலும் நடைபெறுகிறது.

இந்த தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி அபுதாபியில் பயிற்சி முகாமில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்து அணியில் பாகிஸ்தான் பூர்வீகத்தை சேர்ந்த சாகிப் மஹ்மூத் இடம் பிடித்துள்ளார். ஆனால் இவர் அபுதாபியில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாமல் இருந்தார். அவருக்கு இந்திய விசா கிடைக்காமல் இருந்ததால் அவர், பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் கலந்து கொள்வாரா என்பதில் சந்தேகம் நிலவியது. இந்நிலையில், சாகிப் மஹ்மூத் இந்திய சுற்றுப்பயணத்திற்கான விசாவை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

பாகிஸ்தான் பாரம்பரியம் காரணமாகவே தனது விசாவை பெறுவதில் அவருக்கு தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த பிரச்சனை இதற்கு முன்னதாக இங்கிலாந்தின் ஷோயப் பஷீர் மற்றும் ரெஹான் அகமதுவுக்கும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டில், சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீர் இதே விசா பிரச்சினை காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story