கடந்த காலங்களில் எத்தனை கேப்டன்கள் இவ்வாறு செய்துள்ளார்கள்..? ரோகித் சர்மாவுக்கு யுவராஜ் ஆதரவு


கடந்த காலங்களில் எத்தனை கேப்டன்கள் இவ்வாறு  செய்துள்ளார்கள்..? ரோகித் சர்மாவுக்கு யுவராஜ் ஆதரவு
x

image courtesy: instagram/yuvisofficial

கம்பீரின் செயல்பாடுகளை ஒவ்வொரு தொடரின் முடிவிலும் மதிப்பிடுவது சரியல்ல என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 27 ஆண்டுக்கு பிறகு தாரைவார்த்தது. அதன் தொடர்ச்சியாக சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் மோசமாக தோற்றது. அத்துடன் ஆஸ்திரேலியாவில் நடந்த அந்த நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் தோற்று 10 ஆண்டுக்கு பிறகு பார்டர்- கவாஸ்கர் கோப்பையை இழந்தது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பும் பறிபோனது.

இந்த தொடர்களில் ஏற்பட்ட தோல்விகளுக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்தான் காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் 5 ஐ.பி.எல். கோப்பை, ஒரு டி20 உலகக்கோப்பையை ரோகித் வென்றது போல் எத்தனை கேப்டன்கள் வென்றுள்ளார்கள்? என்று இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். அதே போல புதிய தலைமை பயிற்சியாளர் கம்பீரின் செயல்பாடுகளை ஒவ்வொரு தொடரின் முடிவிலும் மதிப்பிடுவது சரியல்ல என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். மாறாக 3-5 வருடங்களின் முடிவில் பார்ப்பதே சரியான மதிப்பீடு என்று அவர் ஆதரவு கொடுத்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இதை நான் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். நீங்கள் ஒவ்வொரு தொடரின் முடிவிலும் செயல்பாடுகளை பார்க்கிறீர்கள். இந்தியா ஒரு தொடரில் வென்றால் நல்ல விஷயங்களை பேசுகிறீர்கள். தோல்வியை சந்தித்தால் அப்படியே நேர்மாறாக விமர்சிக்கிறீர்கள். பொதுவாக நீங்கள் எப்போதும் 3 - 5 வருட காலத்தில் செயல்பாடுகளை பார்க்க வேண்டும். இப்போதுதான் கம்பீர் இந்திய அணிக்குள் வந்துள்ளதால் அவருக்கு கொஞ்சம் நேரம் தேவை.

ரோகித் சர்மா டி20 உலகக்கோப்பையை கேப்டனாக வென்றுள்ளார். அதற்கு முன் இந்தியாவை ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை அவர் அழைத்து சென்றார். அதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 ஐ.பி.எல். கோப்பைகளை வென்றுள்ளார். அப்படிப்பட்ட அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் அணியின் நலனுக்காக தன்னையே நீக்கி மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். கடந்த காலங்களில் அவ்வாறு எத்தனை கேப்டன்கள் செய்துள்ளார்கள்? என்பதை என்னிடம் சொல்லுங்கள்" என்று கூறினார்.


Next Story