சாம்பியன்ஸ் டிராபி தொடர்; இந்திய அணியில் கருண் நாயர் இடம் பெறுவாரா? - தினேஷ் கார்த்திக் அளித்த பதில்
8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் தற்போது உள்நாட்டு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக், காலிறுதி, அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் விதர்பா மற்றும் கர்நாடகா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. இதன் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது.
இந்த தொடரில் விதர்பா அணிக்காக விளையாடி வரும் கருண் நாயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த தொடரில் இதுவரை 752 ரன்களை குவித்துள்ள கருண் நாயரை எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் இடம் பெறுவார் என்று தான் நினைக்கவில்லை என முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கருண் நாயர், நீங்கள் இருக்கும் பார்மைப் பார்ப்பது நம்பமுடியாததாக இருக்கிறது. மயங்க் அகர்வால் கூட நல்ல பார்மில் இருக்கிறார். ஆனால் அழகு என்னவென்றால், இந்திய ஒருநாள் போட்டி அமைப்பு கிட்டத்தட்ட தயாராக இருக்கும் நேரத்தில் இவர்கள் இதுபோன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்திய அளவில் பெரிதளவில் மாற்றங்கள் இருக்க முடியாது. கருண் நாயர் தற்போது இருக்கும் பார்மில் அவரை அணிக்கு கொண்டுவருவது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. மேலும், அவர் தேர்வுக்குழுவின் உரையாடலில் ஒரு பங்காகவும் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்த அணியில் இடம் பெறுவார் என்று நான் நினைக்கவில்லை.
ஆனால் அவர் தொடர்ந்து இதேபோல் சிறப்பாக செயல்பட்டால் அவரை ஏன் தேர்வு செய்ய கூடாது?. இவ்வாறு அவர் கூறினார். 8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.