நிதிஷ் ரெட்டியை நேரில் சந்தித்து பரிசுத்தொகை வழங்கிய ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் அசத்திய நிதிஷ் ரெட்டிக்கு ஆந்திர கிரிக்கெட் வாரியம் ரூ.25 லட்சம் பரிசுத்தொகை அறிவித்திருந்தது.
புதுடெல்லி,
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் நிதிஷ் ரெட்டி இந்திய அணியில் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்துள்ளார். ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைத்து. அதிலும் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.
அதன் காரணமாக சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் ஆல் ரவுண்டராக 5 போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இதில் பேட்டிங்கில் அவர் மொத்தமாக 298 ரன்கள் குவித்தார். இதில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் 114 ரன்கள் அடித்து அசத்தியதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மெல்போர்னில் சதமடித்து அசத்திய நிதிஷ் ரெட்டிக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக ஆந்திர கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய நிதிஷ் ரெட்டியை ஆந்திர முதல் - மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து வாழ்த்தினார். அப்போது ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் நிதிஷ் ரெட்டிக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலையையும் அவர் வழங்கினார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சந்திரபாபு நாயுடு பகிர்ந்துள்ளது பின்வருமாறு:- "அற்புதமான திறமை கொண்ட நம்முடைய கிரிக்கெட்டர் நிதிஷ் ரெட்டியை இன்று சந்தித்தேன். உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நிதிஷ் தெலுங்கு சமூகத்தின் பிரகாசமான நட்சத்திரம். அவரது பயணம் மற்றும் அவரின் பெற்றோர்களின் அசைக்க முடியாத ஆதரவை நான் பாராட்டினேன். அவர் இன்னும் பல சதங்கள் அடித்து வரும் வருடங்களில் இந்தியாவுக்கு தொடர்ந்து வெற்றியை பெற்றுக் கொடுக்க வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.