ஹமாஸ் அமைப்பினருடன் போர் நிறுத்தம்; இஸ்ரேல் கேபினட் ஒப்புதல்


ஹமாஸ் அமைப்பினருடன் போர் நிறுத்தம்; இஸ்ரேல் கேபினட் ஒப்புதல்
x

காஸாவில் ஹமாஸ் உடனான இஸ்ரேல் போர் நிறுத்தம் ஞாயிறு முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

காசா,

இஸ்ரேல்-காசா இடையே நீண்ட காலமாக மோதல்போக்கு நிலவி வந்தது. எனவே 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் 250 பேரை பணய கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.

15 மாதங்களுக்கு மேலாக நடைபெறும் இந்த போரில் இதுவரை சுமார் 46 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். வீடுகளை இழந்த லட்சக்கணக்கானோர் பாதுகாப்பு தேடி எல்லை பகுதியில் தஞ்சம் அடைந்தனர்.

எனவே போரை நிறுத்துவதற்காக கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இரு தரப்பினரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதன் பயனாக இருதரப்பினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி ஹமாஸ் அமைப்பினர் சிறை பிடித்து வைத்துள்ள 33 பணய கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டனர். அதேபோல் தங்களிடம் உள்ள பணய கைதிகளை விடுவிக்கவும், புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்களது சொந்த கிராமத்துக்கு செல்ல வகைசெய்யவும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.

போா் நிறுத்த வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு அண்மையில் ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் காசாவில் 2023இல் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் 15 மாதத்துக்கு பின் முடிவுக்கு வருகிறது.


Next Story