ஆளுநர் குறித்து பேச எதிர்ப்பு.. சபாநாயகர்கள் மாநாட்டில் இருந்து அப்பாவு வெளிநடப்பு
தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரை 'நீக்க' மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என சபாநாயகர் அப்பாவு பேசினார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் சட்டப்பேரவை தலைவர்கள் (சபாநாயகர்கள்) மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தலைமை தாங்கினார். இதில், தமிழகம் சார்பில் சபாநாயகர் மு.அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் பங்கேற்றனர்.
சபாநாயகர் அப்பாவு பேசியபோது, தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தார். அவர் பேசியதாவது:-
தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் கவலை அளிக்கின்றன. அவர் அரசியலமைப்புச் சட்ட விதிகளை கேலிக்கூத்து ஆக்கி வருகிறார். தமிழக மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் தொடர்ந்து அவமதிக்கிறார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் ஆளுநர்களால் இதுபோன்ற செயல்கள் நடக்கின்றன. ஆரோக்கியமான ஜனநாயகம் செழிக்க இந்திய அரசமைப்புச் சட்டத்தை பொருத்தமான முறையில் திருத்துவதற்கான எனது கருத்துகளை இந்த மாநாடு அங்கீகரிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒரு பாலமாக செயல்படுவதற்கு பதில் ஆளுநர்கள் தங்களது அரசமைப்பு கடமைகளை நிறைவேற்றவில்லை.
இந்த காரணத்துக்காக ஆளுநரின் பங்கு குறித்த பல்வேறு ஆணையங்களின் பரிந்துரைகள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. ஆளுநரின் அரசமைப்பு மீறல்களால், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தனது சமூகநலத் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறது.
எனவே, தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரை 'நீக்க' மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அரசியலமைப்பின் 156-வது பிரிவிலிருந்து 'ஜனாதிபதியின் ஒப்புதலின்பேரில் ஆளுநர் பதவியில் இருப்பார்' என்ற வார்த்தையை நீக்க வேண்டும்.
இவ்வாறு அப்பாவு பேசினார்.
இருப்பினும், ஆளுநர் குறித்து அப்பாவு பேசிய கருத்துகளுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் ஆட்சேபம் தெரிவித்தார். அவர் பேசியது அவைக் குறிப்பில் பதிவு செய்யப்படாது என்று கூறினார். ஆளுநர் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பாவு, "இந்த மாநாட்டில் இதைப் பற்றிப் பேச முடியாவிட்டால், வேறு எங்கு பேச முடியும்?" என்று கேள்வி எழுப்பியதுடன், மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்தார்.