தண்டவாளத்தில் கிடந்த இரும்பு பொருள்; ரெயிலை கவிழ்க்க சதியா? - கரூரில் பரபரப்பு
ரெயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கரூர்,
கோவையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 11.40 மணியளவில் கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கரூர் - திண்டுக்கல் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் தாந்தோணி ரெயில்வே கேட் வடக்கு பகுதி அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது ரெயில் தண்டவாளத்தின் மீது வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருள் மீது ரெயில் இன்ஜின் ஏறி கடந்து சென்றது. இதனால் இன்ஜினின் முன் சக்கரத்தில் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து ரெயில் ஓட்டுநர் வெள்ளியணை ரெயில் நிலையத்தில் 11.50 மணிக்கு ரெயிலை நிறுத்திவிட்டு, கரூர் ரெயில்வே போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து தண்டவாளத்தில் ஏற்பட்ட சிறு சேதத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே வெள்ளியணை ரெயில்வே நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்று இன்ஜின் பொருத்தப்பட்டு சுமார் 1.05 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.
தண்டவாளத்தில் இரும்பு பொருளை வைத்து ரெயிலை கவிழ்க்க சரி செய்து உள்ளனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்த செயலை செய்தவர்கள் யார்? என்பது தொடர்பாக ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.