ஈரோட்டில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரம்: நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்கு


ஈரோட்டில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரம்: நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்கு
x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க.வும் நாம் தமிழர் கட்சியும் நேரடியாக போட்டியிடுகிறது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளரும், நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் நேரடியாக போட்டியிடுகின்றனர். இந்தநிலையில், ஈரோடு வ.உ.சி. பூங்காவில் நேற்று முன்தினம் ஏராளமான பெண்கள் திரண்டு காணும் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 3 பேர் பூங்காவுக்கு வெளியே தங்களது முதுகில் பெரிய அளவிலான பேனர் கட்டி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். அவர்கள் கட்டி இருந்த பேனரில் வேட்பாளர் சீதாலட்சுமி புகைப்படமும், அவருக்கு வாக்களிக்கும் படியான வாசகமும் இடம்பெற்றிருந்தது.

இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் நவநீத கிருஷ்ணன் உள்பட 5 பேர் மீது வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை நாம் தமிழர் கட்சியினர் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story