டெல்லியை ஒட்டிய பகுதிகளில் பட்டாசுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு
டெல்லியில் காற்று மாசு பிரச்சினை, மிகவும் தீவிரமான பிரச்சினை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த 1985-ம் ஆண்டு, எம்.சி.மேத்தா என்பவர், டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுவை கட்டுப்படுத்த உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 40 ஆண்டுகளாக இம்மனு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இம்மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
டெல்லியில் காற்று மாசு பிரச்சினை, மிகவும் தீவிரமான பிரச்சினை. எனவே, அதற்கு தீவிரமான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். அரசுத்துறைகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால், கோர்ட்டு தலையிட்டு கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டி இருக்கிறது.
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் வரும் ராஜஸ்தான் மாநில பகுதிகளில், பட்டாசுக்கு ராஜஸ்தான் மாநில அரசு தடை விதித்துள்ளது. அதுபோல், உத்தரபிரதேசம், அரியானா ஆகிய மாநில எல்லைகளில் வரும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் அம்மாநில அரசுகள், பட்டாசுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் இந்த நடவடிக்கை பலன் அளிக்கும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.