சாதிவாரி கணக்கெடுப்பு.. நிதிஷ் குமார் சொன்னபோது அமைதியாக இருந்தவர் ராகுல்: ஐக்கிய ஜனதா தளம் குற்றச்சாட்டு


சாதிவாரி கணக்கெடுப்பு.. நிதிஷ் குமார் சொன்னபோது அமைதியாக இருந்தவர் ராகுல்: ஐக்கிய ஜனதா தளம் குற்றச்சாட்டு
x

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி பாசாங்குத்தனமாக நடந்து கொள்வதாக ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியது.

புதுடெல்லி:

பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என வலியுறுத்தினார். நிதிஷ் குமார் தலைமையிலான அரசாங்கத்தால் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை ஒரு போலியான நடைமுறை என்று சாடினார்.

இதற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயல் தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ஜா பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

இதை விட பெரிய பாசாங்குத்தனம் எதுவும் இருக்க முடியாது. பல இடங்களில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டங்களில் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக நிதிஷ் குமார் வலுவாகவும் தர்க்கரீதியாகவும் பேசியிருக்கிறார். அப்போதெல்லாம் ராகுல் காந்தி அமைதியாக இருந்ததை நான் கண்டேன்.

சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சினையை எழுப்பிய ஒரே தலைவர் நிதிஷ் குமார். இந்தியா கூட்டணியின் கட்சிகளே இதற்கு சாட்சி.

கடைசியாக 1931-ம் ஆண்டு நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின்னர் சமூக நீதியை மேலும் வலுப்படுத்துவதற்காக பல்வேறு சாதிகளின் மக்கள் தொகையை அறிவியல்பூர்வ முறையில் கணக்கிட முடிவு செய்த ஒரே தலைவர் நிதிஷ் குமார்தான்.

பீகாரின் சாதிவாரி கணக்கெடுப்பில், சில சமூகங்களுக்கு அதிகமாகவும், சில சமூகங்களுக்கு குறைத்தும் கணக்கிட்டுள்ளதாக ராகுல் காந்தி நம்புகிறாரா? என்பதை இன்னும் விளக்கமாக மக்களுக்கு சொல்ல வேண்டும். கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவை ஏன் வெளியிடவில்லை?

இவ்வாறு அவர் கூறினார்.

நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க.வுடன் கைகோர்ப்பதற்கு முன்பு, இந்தியா கூட்டணியில் இருந்தது. குறிப்பாக, பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றிருந்தபோது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story