கேரளா: ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
பாலக்காட்டில் ஆற்றில் குளிக்க சென்ற போது, நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
பாலக்காடு,
பாலக்காடு மாவட்டம் செருதுருத்தி பகுதியை சேர்ந்தவர் கபீர் (வயது 47). இவர் அதே பகுதியில் பேக்காி வைத்து நடத்தி வந்தார். இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் நேற்று முன்தினம் செருதுருத்தி அருகே பைங்குளம் பகுதியில் உள்ள பாரதப்புழா ஆற்றில் குளிக்க சென்றனர்.
அப்போது கரையில் நின்றிருந்த கபீரின் மகள் சரா தவறி ஆற்றுக்குள் விழுந்தாள். பின்னர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாள். அவளை காப்பாற்ற முயன்று, மற்ற 3 பேரும் ஆற்றில் அடுத்தடுத்து மூழ்கினர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆற்றில் குதித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் கபீரின் மனைவியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி இறந்தார். தகவல் அறிந்த செருதுருத்தி போலீசார் மற்றும் தீயணைப்பு அதிகாரி சுபி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் அவர்கள் குளித்த இடத்தில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.
அந்த உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் 4 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.