16 வயதில் மயக்கமடைய வைக்க முயன்ற நபர்... நடிகையின் திகில் அனுபவம்
அந்த நபருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பாடம் ஒன்றை என்னுடைய தாயார் கற்பித்து விட்டார் என நடிகை ராஷ்மி கூறியுள்ளார்.
புனே,
திரை துறையில் நடிக்க வரும் புதிதில் நடிகர் நடிகைகளுக்கு சில கசப்பான அனுபவங்கள் ஏற்படுவது உண்டு. இதனை சிலர் வெளியே கூறினாலும், அதனால் அவர்களுக்கு நன்மை ஏற்படுவதற்கு பதில் பாதிப்புகளே அதிகரிக்கும் என்பதற்காக, அதனை கடந்து செல்பவர்கள் அதிகம். இந்த சூழலில், சில ஆண்டுகளுக்கு முன் மீடூ விவகாரம் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
கொரோனா காலகட்டத்திற்கு பின்னர், சமீபத்தில் ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளிவந்து மலையாள திரையுலகில் புகைச்சலை கிளப்பியது. பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் பல்வேறு கலைஞர்கள் மீதும் புகார் கணைகள் பாய்ந்தன. இதுபற்றிய வழக்கு விசாரணைகள் ஒருபுறம் நடந்து வருகின்றன. எனினும், திரையுலகில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில், அதற்காக சில தகாத சம்பவங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் கலைஞர்களுக்கு ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில், பாலிவுட் நடிகையான ராஷ்மி தேசாய் அவருக்கு நடிக்க வந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை பற்றி கூறியிருக்கிறார். பாலிவுட் பப்பிள் என்ற வலைதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், திரைப்பட ஒத்திகைக்காக சென்ற இடத்தில் நபர் ஒருவர், அவரை சுயநினைவின்றி போக செய்ய முயற்சித்த அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன் நடந்த விசயம் என்றாலும், அது நினைவில் இன்றும் உள்ளது என கூறுகிறார். அவர் கூறும்போது, பல தருணங்களில் இதுபற்றி பேசியுள்ளேன். இதுபோன்ற சம்பவங்கள் இணையதளத்தில் நிறைய உள்ளன. என்னை திரைப்பட ஒத்திகை ஒன்றிற்காக வரும்படி கூறினார்கள். நான் சென்றபோது, அந்த நபரை தவிர வேறு யாரையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தேன்.
அப்போது எனக்கு வயது 16. அந்த நபர் என்னை சுயநினைவற்று போக செய்ய முயற்சி மேற்கொண்டார். இதனால் எனக்கு அசவுகரியம் ஏற்பட்டது. ஆனால், எப்படியோ நான் தப்பி வந்தேன்.
சில மணிநேரங்களுக்கு பின்பு, நடந்த விசயங்கள் எல்லாவற்றையும் என்னுடைய தாயாரிடம் கூறினேன். அந்த நபருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பாடம் ஒன்றை என்னுடைய தாயார் கற்பித்து விட்டார். அடுத்த நாள், அந்நபரை நானும், என்னுடைய தாயாரும் நேரில் சென்று சந்தித்தோம். அந்த நபரை என்னுடைய தாயார், கன்னத்தில் அறைந்து விட்டார் என ராஷ்மி கூறியுள்ளார்.
இதன்பின்னர், திரையுலகில் நல்ல மனிதர்களை சந்தித்தேன். அவர்களுடன் மகிழ்ச்சியாக பணியாற்றினேன். ஒவ்வொரு துறையிலும், பெண்களை படுக்கைக்கு அழைப்பது நடக்கிறது. நல்லவர்களும் இருக்கிறார்கள். கெட்டவர்களும் இருக்கிறார்கள். கடவுள் இரக்கம் வாய்ந்தவர். இதில், பாதிக்கப்படாமல் தங்களுடைய பாதையை ஒருவர் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.
தில் சே தில் தக், நாகின் (2015) உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ராஷ்மி, ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பல போஜ்புரி படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.