மிதுனம்: புத்தாண்டு ராசிபலன் 2026: திருமணத்திற்கு வெயிட்டிங்கா..? உங்களுக்கான ஆண்டு இதுதான்..!

குழந்தை பாக்கியம் தாமதமானவர்களுக்கு இந்த வருடம் நல்ல செய்தி கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியினர் வெற்றிப் பாதையில் காலடி எடுத்து வைக்கும் மங்கள ஆண்டாக 2026 பிறக்கிறது. தசம கேந்திரமான பத்தாம் இடத்தில் உள்ள சனி, ஜென்ம ராசியிலிருந்து தனஸ்தானத்திற்கு செல்ல உள்ள குரு, வெற்றி ஸ்தானமான மூன்றாம் இடத்தில் உள்ள கேது, தன் வீட்டை பார்க்கும் ராசி அதிபதி புதன் என்ற அமைப்பில் தொடங்கும் இந்த புத்தாண்டு பல மாற்றங்களை கொண்டு வரும்.
திருமணத்திற்கு காத்துள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும். தடைபட்ட திருமணங்கள் விரைவாக முடிவாகும். குடும்பத்தில் பிரிந்த உறவுகள் ஒன்றாக கூடுவார்கள். அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு புகழ் அதிகரிக்கும். மூத்தவர்களுடைய வழிகாட்டுதல் கிடைக்கும். மற்றவர் ஆலோசனைகளை ஆராயாமல் பின்பற்றக் கூடாது.
குடும்பம், நிதிநிலை
குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். தாய் வழி உறவினர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். குழந்தை பாக்கியம் தாமதமானவர்களுக்கு இந்த வருடம் நல்ல செய்தி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் உள்ள சிக்கல்களை சரி செய்ய வேண்டும். குடும்பப் பெரியவர்களுடைய வழிகாட்டுதல் சரியான நேரத்திற்கு கிடைக்கும். குழந்தைகள் மூலம் பெருமை ஏற்படும்.
சொந்த பந்தங்களுக்கு இடையே உள்ள சண்டை சச்சரவுகளை சமரசம் செய்து வைப்பீர்கள். நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவு பல விதங்களில் கிடைக்கும். வருடத்தின் பிற்பகுதியில் தனஸ்தான குரு உங்களுடைய பல கனவுகளை நிறைவேற்றி வைப்பார். புதிய நிலம் மற்றும் வீடு வாங்க விரும்பினால் வருடத்தின் பிற்பகுதியில் வாங்குவது நல்லது.
தொழில், உத்தியோகம்
தொழில்துறையினர் இதுவரை பாடுபட்டதற்கான பலன்களை பெறக்கூடிய ஆண்டு இது. உங்கள் வழிகாட்டுதலில் பலரும் தங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வார்கள். தொழில் விரிவாக்கம் செய்வதற்கும் இது நல்ல சமயம். கட்டுமானத்துறை, விவசாய விளைபொருட்கள், திரவ பொருட்கள், பெட்ரோலியம் மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் அதிகப்படியான வேலைப்பளு ஏற்படும். பணி சார்ந்து வெளியூர்களுக்கு செல்ல வேண்டி வரும். பணியிடங்களில் சக ஊழியர்களிடம் எந்தவித கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. ஒரு சிலருக்கு வேலை மாற்றம் அல்லது பணியிட மாற்றம் உண்டு.
கலை, கல்வி
தகவல் தொடர்பு, ஊடகம், எழுத்து, கற்பித்தல், படைப்புத்திறன் போன்ற கலைத்துறையினருக்கு இது கை கொடுக்கும் ஆண்டு. உங்களுடைய முயற்சிகள் மற்றும் படைப்புகள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெறும். சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையினருக்கு மகிழ்ச்சியான ஆண்டு. டிஜிட்டல் ஊடகங்களை தொடங்க விரும்புபவர்களுக்கு இது நல்ல சந்தர்ப்பம்.
கல்வியைப் பொறுத்தவரை மாணவ, மாணவியர் தனித் திறன்கள் மேம்படும் ஆண்டு இது. நல்ல நினைவாற்றல் அவர்களுக்கு ஏற்படும். போட்டித் தேர்வுகள் மற்றும் உயர்கல்வி கற்க விரும்புவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கும்.
நன்மைகள் நாடி வர..
எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் உங்களை சீர்படுத்திக் கொள்ள வேண்டிய ஆண்டு இது. காது, மூக்கு, தொண்டை பாதிப்புகள், செரிமான கோளாறுகள், தோல் அரிப்பு ஏற்பட்டு விலகும். மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். தாய், தந்தையின் உடன் பிறந்தோருக்கு இயன்றவரை தங்கத்தால் ஆன சிறிய பொருள்களை பரிசாக கொடுப்பது பல நன்மைகளை தரும்.
நீங்கள் பிறந்த கிழமைகளில் மற்றும் தேதிகளில் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்று அங்கு வரும் குழந்தைகளுக்கு இனிப்பு பிரசாதம் தருவது காரிய வெற்றி அளிக்கும். சனிக்கிழமைகளில் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு பணம் அல்லது ஆடைகளை தானமாக வழங்குவதும் நல்லது. பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்வதும், குடும்ப பெரியவர்கள், கற்றுக் கொடுத்த ஆசிரியர்களிடம் ஆசி பெறுவதும் பல நன்மைகளை ஏற்படுத்தும்.
கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்






