மேஷம்: புத்தாண்டு ராசிபலன் 2026: முக்கியமான கிரகங்களின் சஞ்சாரம் எப்படி இருக்கும்..?

உயர்கல்வி பெறுபவர்களுக்கு இந்த ஆண்டு பல விதங்களிலும் நன்மை தரும்.
மேஷம் -- 63 %
அறிவுப்பூர்வ முடிவுகளே வெற்றி தரும்
மேஷம் ராசியினருக்கு பல இடங்களிலிருந்தும் பணம் வரும். புதிய சொத்து சேர்க்கை உண்டு. லாப ஸ்தானத்தில் ராகு மற்றும் ராசியதிபதி செவ்வாய் ஆகியோர் குரு பார்வை பெற்றிருப்பதாலும், தன ஸ்தானத்தில் உச்ச சந்திரன் இருப்பதாலும் மலைபோல் வந்த தடைகள் பனி போல் விலகும். அரசியல் மற்றும் பொது வாழ்வில் உள்ளவர்கள் மறைமுக எதிர்ப்புகளை சந்திப்பார்கள். எதிர்பாராத விதமாக புதிய பொறுப்புகளும் அவர்களை வந்து சேரும்.
பல நாட்களாக எதிர்பார்த்த, எதிர்பாராத நல்ல மாற்றங்களையும் உங்களுக்கு இந்த புத்தாண்டு தரும். தொலைநோக்குப் பார்வையோடு, சிந்தித்து பல முடிவுகளை எடுக்க வேண்டிய ஆண்டு இது. உணர்வுப்பூர்வ முடிவுகளை விட, அறிவுப்பூர்வ முடிவுகளே உங்களுக்கு வெற்றி தரும். வருட ஆரம்பத்தில் சிக்கல்கள் இருந்தாலும் போகப்போக நிலைமை சீராகி விடும்.
குடும்பம், நிதிநிலை
குடும்ப உறுப்பினர்களுடன் அமைதியான போக்கை கையாளவும். நெருங்கிய உறவுகளுக்குள் பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். பல விஷயங்களை பொறுமையாக கையாண்டுதான் சரி செய்ய வேண்டும். உறவுகளுக்குள் எப்படிப்பட்ட சிக்கல்கள் இருந்தாலும் அவை ஆண்டின் பிற்பகுதியில் விலகி விடும். எதிலும் அவசரப்பட வேண்டிய அவசியம் இல்லை.
நிதி நிலையை பொறுத்தவரை பண வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்கும் திறனும் உங்களுக்கு ஏற்படும். அதனால், எந்த ஒரு செலவையும் திட்டமிட்டு செய்யுங்கள். பழைய கடன்களை திருப்பி செலுத்தி விடுங்கள்.
தொழில், உத்தியோகம்
முக்கியமான கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் பார்வை பலன் காரணமாக உங்களுடைய தொழில் நடைமுறைகளில் பல மாற்றங்களை செய்வீர்கள். சுயதொழில் செய்ய திட்டமிடுபவர்கள் மனத்தளர்ச்சி அடையாமல் செயல்பட வேண்டும். ஜூன் மாதம் வரை சில சிக்கல்கள் ஏற்பட்டு அதன் பிறகு விலகும். ஏற்கனவே, தொழில் செய்பவர்கள் ஆண்டின் பிற்பகுதியில் புதிய நடைமுறைகளை மேற்கொள்ளலாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது வேலை மாற்றம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கிடைக்கும். பணியிடத்தில் பொறுமையாக செயல்பட்டால் ஆண்டின் பிற்பகுதியில் அதன் நன்மைகளை பெறுவீர்கள். பலருக்கும் ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
கலை, கல்வி
ராசியில் சனியின் சஞ்சாரம் இருப்பதால் கலைத்துறையினர் மனம் சளைக்காமல் தங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எதிர்பாராத நேரத்தில் திடீர் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய படைப்புகளின் தனித்தன்மைக்காக பல பாராட்டுக்கள் உங்களுக்கு வந்து சேரும்.
எழுத்து மற்றும் இசைக்கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். ஒரு சிலருக்கு வெளி மாநிலங்கள் அல்லது வெளிநாடுகள் சென்று தங்களுடைய திறமையை காண்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
கல்வியைப் பொறுத்தவரை உயர்கல்வி பெறுபவர்களுக்கு இந்த ஆண்டு பல விதங்களிலும் நன்மை தரும். அரசு போட்டித் தேர்வுகளில் பல தடவை முயன்றும் வெற்றி பெற முடியாதவர்கள் இந்த வருடம் வெற்றி பெறுவார்கள். புதிய தொழில்நுட்பம் அல்லது சான்றிதழ் படிப்புகளில் இணைவதற்கு இது தகுந்த காலகட்டம்.
நன்மைகள் நாடி வர..
மேஷம் ராசியினருக்கு ஒற்றைத் தலைவலி, தைராய்டு குறைபாடு, பற்களில் பாதிப்பு மற்றும் செரிமான கோளாறுகள் ஏற்படலாம். மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் கிருமி பாதிப்பு ஏற்பட்டு விலகும். வாகனங்களை ஓட்டும் பொழுது கூடுதல் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
உடன்பிறந்த சகோதர சகோதரிகளுடன் சுமுகமாக பழகுவதன் மூலம் மன அமைதியும் தெளிவும் ஏற்படும். ஏழை எளியோர், வயதானவர்கள், உடல் ஊனமுற்றோருக்கு உங்களால் இயன்ற பொருளுதவி மற்றும் ஆடை தானம் செய்வதன் மூலம் புதிய நபர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். உங்கள் பிறந்த கிழமை அல்லது தேதியில் சிவப்பு நிற உடை அணிந்து மஞ்சள் நிற பொருட்களையோ அல்லது மஞ்சள் நிற உடை அணிந்து சிவப்பு நிற பொருட்களையோ கோவிலில் வைத்து தானம் தருவது நன்மை பல தரும்.
கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்






