சென்னை வந்த விமானத்தில் பெண் தொழில் அதிபரிடம் ரகளை செய்த வாலிபர்கள்
பெண் தொழில் அதிபர், சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.;
AI Image
மீனம்பாக்கம்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு கோவையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 140 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு வந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தில் பயணித்து கொண்டிருந்த 35 வயது பெண் தொழில் அதிபர் ஒருவரது இருக்கைக்கு, பின் வரிசையில் அமர்ந்திருந்த 3 வாலிபர்கள் கூச்சல் போட்டு, சத்தமாக பேசிக்கொண்டு, சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் ரகளையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் தொழில் அதிபர் கண்டித்தார். அமைதியாக பயணம் செய்யுங்கள். ஏன் இவ்வாறு கூச்சல் போட்டு, சக பயணிகளுக்கு இடையூறு செய்கிறீர்கள்? என தட்டிக்கேட்டார்.
இதனால் அந்த வாலிபர்கள், ஆபாசமான வார்த்தைகளால் பெண் தொழில் அதிபரை திட்டியதுடன், அவரிடம் ரகளை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர், விமான பணிப்பெண்களிடம் புகார் செய்தார். அவர்கள், அந்த வாலிபர்களிடம் அமைதியாக இருக்கும்படி கூறினர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து கூச்சல் போட்டு ஆபாசமாக பேசி ரகளை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விமானம் இரவு 11 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது. விமானம் நின்ற இடத்தில் இருந்து, விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்துக்கு வருவதற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் ‘பிக்கப்’ பஸ்சில் ஏறி வந்தனர். அப்போதும் பெண் தொழில் அதிபரை வாலிபர்களில் ஒருவர் முழங்கையால் இடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பெண் தொழில் அதிபர், சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பெண் தொழில் அதிபரிடம் மோசமாக நடந்து கொண்ட 3 பயணிகள் யார்? என்று தெரியவில்லை. விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் பயணியின் இருக்கைக்கு பின் வரிசையில் அமர்ந்திருந்த 3 வாலிபர்களின் டிக்கெட் எண்களை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் தொழில் அதிபரின் கணவர், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு துறையில் உயர் அதிகாரி என்றும், அந்த பெண் சென்னை மற்றும் கோவையில் பள்ளிக்கூடம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.