சுதந்திரதின விழா ஏற்பாடுகள் தீவிரம்.. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிப்பு
சுதந்திரதின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.;
சென்னை,
நமது நாட்டின் 79-வது சுதந்திரதின விழா நாளை (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் சில புதிய அறிவிப்புகளை வெளியிடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது உள்பட பல்வேறு விருதுகளை வழங்குவார்.
முன்னதாக கோட்டை முன்பு நடக்கும் பிரமாண்ட அணிவகுப்பையும் அவர் பார்வையிடுகிறார். இதற்காக கோட்டையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திரதின விழாவையொட்டி தமிழகம் முழுவதும், பாதுகாப்புக்காக 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுதந்திரதின விழா நடைபெறும் சென்னை கோட்டை பகுதி 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் இன்று இரவில் இருந்து கொண்டுவரப்படுகிறது.
கோவையில் 3 அடுக்கு பாதுகாப்பு
சுதந்திர தின விழாவையொட்டி கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமானநிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தி வருகிறார்கள். பயணிகளின் பார்சல்கள் தீவிரமாக சோதனை நடத்தப்படுகிறது.
கோவை காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையம், ஆம்னி பஸ்நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை நகரில் போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் தலைமையில் 2 ஆயிரம் போலீசாரும், மாவட்ட பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 1,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.