புதுச்சேரி: அரசுடனான போக்குவரத்து ஊழியர்களின் பேச்சுவார்த்தை தோல்வி; வேலை நிறுத்தம் தொடரும்..?
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை, பி.ஆர்.டி.சி. சங்கத்தின் தலைவர்கள் நேரில் சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.;
புதுச்சேரி,
புதுச்சேரியில் பி.ஆர்.டி.சி. எனப்படும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதுச்சேரியிலும் பேருந்து சேவை வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து கடலூர், விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
புதுச்சேரி பி.ஆர்.டி.சி.யில், 220-க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களும், 250-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதம் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்தது. இதனையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
எனினும், அதில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலை காணப்பட்டது. இந்த நிலையில், புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், 7-வது ஊதிய குழு சம்பளம் வழங்க கோரியும் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டுநர்களின் போராட்டம் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகள் ஓடவில்லை.
கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை. இதனால், வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், தொழிலாளர்கள் என பொதுமக்களில் பல்வேறு தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை, பி.ஆர்.டி.சி. சங்கத்தின் தலைவர்கள் நேரில் சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், அரசுடனான போக்குவரத்து ஊழியர்களின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இதனால், வேலை நிறுத்தம் தொடரும் என கூறப்படுகிறது.
கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என முன்பே அறிவிக்கப்பட்டது. இதன்படி, பேருந்துகள் பணி மனையில் நிறுத்தப்பட்டு உள்ளன. பணி மனையின் முன்பு ஊழியர்கள் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். எனினும் புதுச்சேரியில், தனியார் மற்றும் தமிழக அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், ஓரளவுக்கு பயணிகள் நிலைமையை எதிர்கொண்டு வருகின்றனர்.