லண்டன் செல்ல இருந்த 'ஏர் இந்தியா' விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு; டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.;
புதுடெல்லி,
டெல்லி விமான நிலையத்தில் இன்று 'ஏர் இந்தியா' நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.ஐ.2017 விமானம் லண்டன் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணிகள் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட தயாரானபோது, விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தின் டேக்-ஆப் ரத்து செய்யப்பட்டது. விமானத்தை விமானிகள் ஓடுபாதையின் மற்றொரு பகுதிக்கு கொண்டு வந்து நிறுத்தினர். தொடர்ந்து அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட விமானம் 'போயிங் 787-9' ரகத்தை சேர்ந்தது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான பயணம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக 'ஏர் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது.