வாக்குகளை திருடும் தேர்தல் ஆணையம் - ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையத்தில் உள்ளவர்கள் யார் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டாலும் அவர்களை நாங்கள் விடமாட்டோம் என்று ராகுல் காந்தி கூறினார்.;
புதுடெல்லி,
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் இதுபற்றிய விவாதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
வாக்குகள் திருடப்படுவதாக நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். வாக்குளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான வெளிப்படையான சான்றுகள் எங்களிடம் உள்ளன. இதனை நான் சாதாரணமாகச் சொல்லவில்லை. நூறு சதவீதம் ஆதாரத்துடன் நான் இதைச் சொல்கிறேன். நாங்கள் அந்த ஆதாரத்தை வெளியிட்டவுடன் தேர்தல் ஆணையம், பாஜகவுக்கு ஆதரவாக வாக்குகளைத் திருடும் வேலையைச் செய்வது இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியவரும்.
2023 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச தேர்தல், கடந்த ஆண்டு நடைபெற்றா மக்களவைத் தேர்தல்களில் எங்களுக்கு சந்தேகம் இருந்தது. மராட்டிய தேர்தல்களின்போது எங்களது சந்தேகம் மேலும் அதிகரித்தது. நாங்கள் 6 மாதங்கள் தனிப்பட்ட முறையில் விசாரணையை நடத்தினோம். அதில் எங்களுக்கு ஒரு அணுகுண்டு கிடைத்தது. இந்த அணுகுண்டு வெடிக்கும்போது தேர்தல் ஆணையம் காணாமல் போய்விடும். தேர்தல் ஆணையத்தில் உயர் அதிகாரிகள் முதல் கீழ் நிலையில் உள்ளவர்கள் வரை, யார் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டாலும் அவர்களை நாங்கள் விடமாட்டோம். இது தேசத்துரோகம்.
இவ்வாறு அவர் கூறினார்.