மாத சம்பளம் ரூ. 15,000.. ஒப்பந்த ஊழியருக்கு ரூ.72 கோடிக்கு சொத்துகள் - லோக்அயுக்தா போலீசார் அதிர்ச்சி
விசாரணையில் மனைவி பெயர்களில் 24 வீடுகளும், 40 ஏக்கருக்கு விவசாய நிலமும், 4 வீட்டுமனைகள் இருப்பதும் தெரியவந்தது.;
கொப்பல்,
கர்நாடகாவில் அரசு அதிகாரிகள் முறைகேடாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்தநிலையில், கொப்பல் மாவட்டத்தில் கர்நாடக கிராமப்புற அடிப்படை வசதிகள் வளர்ச்சி துறையில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி ஊழியராக பணியாற்றி வருபவர் கலகப்பா நிடகுந்தி. இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக தான் அரசு துறையில் ஒப்பந்த ஊழியராக வேலைக்கு சேர்ந்தார். கலகப்பாவுக்கு பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் இருப்பதாகவும், அவர் சட்டவிரோதமாக அதனை சம்பாதித்து இருப்பதாகவும் லோக் அயுக்தா போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, கொப்பல் மாவட்டத்தில் பிரகதிநகரில் உள்ள கலகப்பாவுக்கு சொந்தமான வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது லோக் அயுக்தா போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர். அதாவது அவரது வீட்டில் 350 கிராம் தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் கலகப்பா, அவரது மனைவி பெயர்களில் 24 வீடுகளும், 40 ஏக்கருக்கு விவசாய நிலமும், 4 வீட்டுமனைகள் இருப்பதும் தெரியவந்தது. இதுதவிர அவர் தனது வங்கி கணக்குகளில் பல லட்சம் ரூபாய் சேமித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அவரது தம்பி பெயரிலும் சில வீட்டுமனைகளை கலகப்பா வைத்திருப்பதற்கான சொத்து ஆவணங்களும் போலீசாரிடம் சிக்கியது. அந்த சொத்து ஆவணங்களை போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர். கலகப்பா, அவரது மனைவி பெயரில் ஒட்டு மொத்தமாக ரூ.72 கோடிக்கு சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. தினக்கூலி ஒப்பந்த ஊழியரிடம் இவ்வளவு சொத்துகள் இருப்பது போலீசாருக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, கலகப்பா மீது கொப்பல் லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.