கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்... கண்டித்த கணவர்... அடுத்து நடந்த கொடூரம்
மனைவி நேத்ராவதி வீட்டில் நாகபஞ்சமி பூஜை நடத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் முனிராபாத் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பூதகும்பா கிராமத்தை சேர்ந்தவர் தியாமண்ணா, தொழிலாளி. இவரது மனைவி நேத்ராவதி. தம்பதி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் நேத்ராவதிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி தியாமண்ணாவுக்கு தெரியவந்ததும், நேத்ராவதியை கண்டித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த மாதம் (ஜூலை) 25-ந் தேதியில் இருந்து தியாமண்ணா திடீரென்று காணாமல் போய் விட்டார். இதுபற்றி நேத்ராவதியிடம் கேட்ட போது தனது கணவர் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலுக்கு சென்றிருப்பதாக கூறி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த தியாமண்ணாவின் சகோதரர், 2 நாட்களுக்கு முன்பு முனிராபாத் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
மேலும் சந்தேகத்தின் பேரில் நேத்ராவதியை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தனது கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்திருப்பதை நேத்ராவதி ஒப்புக் கொண்டார். இதையடுத்து, நேத்ராவதி, அவரது கள்ளக்காதலனான அதே கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவரான சாமண்ணாவை முனிராபாத் போலீசார் கைது செய்தார்கள். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளிவந்தது.
அதாவது நேத்ராவதிக்கும், சாமண்ணாவுக்கும் கடந்த பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதுபற்றி தியாமண்ணாவுக்கு தெரியவந்ததும், நேத்ராவதியை கண்டித்துள்ளார். கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருக்கும் தியாமண்ணாவை கொலை செய்ய நேத்ராவதி, சாமண்ணா ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, கடந்த 25-ந் தேதி தோட்டத்தில் வைத்து இரும்பு கம்பியால் தாக்கி தியாமண்ணாவை 2 பேரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை 5 கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்று, பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். அதன்பிறகு, யாருக்கும் தெரியாமல் நேத்ராவதி வீட்டுக்கு வந்துள்ளார். அத்துடன் கணவர் தர்மஸ்தலா கோவிலுக்கு சென்றிருப்பதாக கூறி, வீட்டில் நாகபஞ்சமி பூஜையையும் நேத்ராவதி நடத்தியது தெரியவந்துள்ளது.
கைதான 2 பேர் மீதும் முனிராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின்பு அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.