விவாகரத்து வழக்கில் கணவர் ஆண்மையில்லாதவர் என மனைவி கூறுவது அவதூறு ஆகாது: மும்பை ஐகோர்ட்டு

விவாகரத்து வழக்கில் கணவர் ஆண்மையில்லாதவர் என மனைவி கூறுவது அவதூறு ஆகாது என்று மும்பை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.;

Update:2025-08-02 11:52 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்தவருக்கும், சத்தீஷ்கார் மாநிலம் ராய்பூரை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்தனர். அவர்களுக்கு கோர்ட்டு விவாகரத்து வழங்கியது. விவாகரத்து வழக்கின்போது பெண், கணவரை ஆண்மையில்லாதவர் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்தநிலையில் முன்னாள் மனைவி விவாகரத்து தொடர்பான மனுக்களில் தன்னை ஆண்மையில்லாதவர் என கூறி அவதூறு பரப்பியதாக கணவர் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த செசன்ஸ் கோர்ட்டு கணவரின் புகார் குறித்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு உத்தரவிட்டது. ஆனால் செசன்ஸ் கோர்ட்டின் இந்த உத்தரவை ரத்து செய்ய கோாி முன்னாள் மனைவி தரப்பில் மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.எம். மோதக் அமர்வு முன் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விவகாரத்து வழக்கு விசாரணையின் போது மனைவி, கணவரை ஆண்மையில்லாதவர் என கூறுவது அவதூறு ஆகாது என்றார். இதுதொடர்பாக நீதிபதி, "திருமணத்தில் ஒரு பெண் எப்படி பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை நியாயப்படுத்த இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.

விவாகரத்து தொடர்பான வழக்கில் ஆண்மை தொடர்பாக கூறுவது அவசியமானது. தம்பதிக்கு திருமண உறவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே மனைவி அவரது நலன்கருதி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவது நியாயமானது தான். அதை அவதூறு என கூறமுடியாது" என்றார். இதையடுத்து பெண்ணுக்கு எதிரான முன்னாள் கணவரின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்