பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை
பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் தியோரியா பகுதியில் உள்ள லார் நகரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் சலாஹாபாத் சேலம்பூரில் வசிக்கும் ஆசிரியர் தனஞ்சய் வர்மா வீட்டிற்கு டியூசனுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த 2020 ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதி டியூசனுக்கு சென்ற மாணவியை ஆசிரியர் தனஞ்சய் வர்மா மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தொடர்ந்து 5 நாட்கள் மாணவியை வீட்டில் அடைத்து வைத்து ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் மாணவி அவரிடம் இருந்து தப்பித்து, தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியர் தனஞ்சய் வர்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை உ.பி.யில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், பாலியல் வழக்கின் விசாரணை முடிவில், ஆசிரியர் தனஞ்சய் வர்மாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி வீரேந்திர சிங் தீர்பளித்தார். மேலும் ரூ.20,000 அபராதமும் விதித்தும் உத்தரவிட்டார். பள்ளி மாணவி தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் சச்சிதானந்த் ராய் வாதாடினார்.