'வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லை' - ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ்
வாக்காளர் பட்டியலில் தனது பெயரே இல்லையென்றால் தேர்தலில் எப்படி போட்டியிடுவது? என தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.;
பாட்னா,
பீகாரில் சட்டசபை தேர்தல் வருவதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள், தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருத்தப்பணியின் முதல்கட்டம் முடிந்தநிலையில், தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.
இந்த நிலையில், தேர்தல் கமிஷன் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயரே இல்லை என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியின்போது தனது ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும், ஆனால் தனது வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள EPIC எண்ணை வைத்து தேடியபோது எந்த தரவுகளும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "வாக்காளர் பட்டியலில் எனது பெயரே இல்லையென்றால், தேர்தலில் எப்படி போட்டியிடுவது? ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், சுமார் 20 முதல் 30 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் 65 லட்சம், அதாவது 8.5% வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. பலர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறிவிட்டதாகவும், பலர் உயிரிழந்துவிட்டதாகவும், பலர் பெயர் மாற்றம் செய்து கொண்டதாகவும் தேர்தல் ஆணையம் கூறுகிறது.
ஆனால் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில், வாக்காளரின் முகவரி, பூத் எண் மற்றும் EPIC எண் உள்பட எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை. இதனால் யாருடைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், தேஜஸ்வி யாதவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், அவரது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. அவர் தனது பழைய EPIC எண்ணை வைத்து தேடியதால் அவரால் தனது பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், புதிதாக வழங்கப்பட்ட EPIC எண் - RABO456228 மற்றும் சீரியல் எண் 416-ல் தேஜஸ்வி யாதவின் பெயர் இடம்பெற்றுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.