கணவரை கொல்ல கூலிப்படையை ஏவிய மனைவி... உயிருடன் புதைக்க முயன்றபோது நடந்த திடீர் திருப்பம்

சாதனாவின் சகோதரர்கள் மற்றும் கூலிப்படையினர் என மொத்தம் 11 பேர் ராஜீவின் வீட்டிற்குள் நுழைந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.;

Update:2025-08-02 20:40 IST

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்தவர் ராஜீவ். இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2009-ம் ஆண்டு சாதனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

ராஜீவின் பூர்வீக கிராமத்தில் அவருக்கு சொந்த வீடு இருந்தாலும், அவரது மனைவி சாதனா கிராமத்தில் வசிக்க விரும்பாததால் நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவரது குழந்தைகள் இருவரும் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இதற்கிடையில் சாதனாவுக்கும், ராஜீவுக்கும் இடையே சில பிரச்சினைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சாதனா தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதையடுத்து சாதனா தனது சகோதரர்கள் 5 பேரிடம் இது குறித்து பேசி, அவர்களையும் இந்த கொலை திட்டத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளார். பின்னர் திட்டமிட்டபடி கொலையை அரங்கேற்ற கூலிப்படையை ஏவியுள்ளார்.

இதன்படி கடந்த ஜூலை 21-ந்தேதி இரவு சாதனாவின் சகோதரர்கள் மற்றும் கூலிப்படையினர் என மொத்தம் 11 பேர் ராஜீவின் வீட்டிற்குள் நுழைந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ராஜீவின் ஒரு கை மற்றும் 2 கால்களும் முறிந்தன. வலியால் கதறிய ராஜீவை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று உயிருடன் புதைத்து விட முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து ராஜீவை சி.பி.கஞ்ச் பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று, அவரை புதைப்பதற்காக குழியை தோண்டத் தொடங்கினர். ஆனால் அந்த சமயத்தில் ஒரு எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்தது. ஆள்நடமாட்டம் இல்லாத அந்த பகுதி வழியாக திடீரென ஒரு நபர் வந்துள்ளார். அந்த நபரை பார்த்ததும், மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் 11 பேரும் தங்கள் கொலை திட்டத்தை கைவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

பின்னர் அந்த நபர், அடிபட்டு கிடந்த ராஜீவை பார்த்து உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ராஜீவ் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜீவின் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்