கேரளாவில் பயங்கரம்: பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்து இளைஞரை கொன்ற கள்ளக்காதலி
இளைஞருக்கு பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்து கள்ளக்காதலி கொலை செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
எர்ணாகுளம்,
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலம் மதிராப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அன்சில் (38 வயது). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அன்சிலுக்கு சோலாடு பகுதியைச் சேர்ந்த அதீனா (30 வயது) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர். மேலும் அன்சில், அதீனாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று அவருடன் தங்கி இருந்துள்ளார்.
கடந்த மாதம் 29-ந்தேதி அதீனாவின் வீட்டுக்கு அன்சில் சென்றிருக்கிறார். இந்த நிலையில் மறுநாள் அதிகாலையில் அன்சில் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக அவருடைய நண்பர்கள் சிலருக்கு அதீனா தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அங்கு சென்ற அவர்கள், அன்சிலை மீட்டு சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். முதலில் அன்சில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவே போலீசார் கருதினர். அதனடிப்படையிலேயே விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அன்சில், போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் அதீனா தனக்கு விஷம் கொடுத்ததாக தெரிவித்தார். பின்னர் அன்சில், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அன்சில் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதீனாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அன்சிலுக்கு பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்ததை அவர் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.
அன்சிலும், அதீனாவும் நீண்டகாலமாக பழகி வந்துள்ளனர். அதீனாவின் வீட்டுக்கு அன்சில் அடிக்கடி சென்று தங்கி வந்திருக்கிறார். இந்த சூழலில், அவர் எதற்காக அன்சிலுக்கு பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்து கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக அதீனாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இளைஞருக்கு பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்து கள்ளக்காதலி கொலை செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.