வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான வெகுமான தொகை உயர்வு: தேர்தல் கமிஷன்
வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு வெகுமான தொகையை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பிழைகளற்ற வாக்காளர் பட்டியல்தான் இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாக அமைந்துள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் வாக்காளர் பதிவு அலுவலர் (இ.ஆர்.ஒ.), உதவி வாக்காளர் பதிவு அலுவலர் (ஏ.இ.ஆர்.ஒ.), வாக்குச்சாவடி அளவிலான அலுவலர் (பி.எல்.ஒ.) மற்றும் பி.எல்.ஒ. கண்காணிப்பாளர்களைக் கொண்டு வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அலுவலர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புதான், பிழையற்ற மற்றும் வெளிப்படையான வாக்காளர் பட்டியலை தயாரிக்க முக்கிய காரணிகளாக உள்ளன.
பி.எல்.ஒ. அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு 2015-ம் ஆண்டில்தான் ஆண்டு வெகுமான தொகை உயர்த்தப்பட்டு இருந்தது. தற்போது அவர்களுக்கான ஆண்டு வெகுமான தொகையை உயர்த்தி வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதுபோல வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு வெகுமான தொகையை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பி.எல்.ஒ. அலுவலர்கள் பெற்று வந்த வெகுமானம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாகவும்; அவர்கள் பெற்று வந்த ஊக்கத் தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தப்படும். கண்காணிப்பாளர்கள் பெற்று வந்த வெகுமானத் தொகை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இ.ஆர்.ஒ. மற்றும் ஏ.இ.ஆர்.ஒ.க்களுக்கு முறையே ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் வெகுமானம் வழங்கப்படும்.
மேலும், பீகாரில் தொடங்கியுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணிகளில் ஈடுபடும் பி.எல்.ஒ.க்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.6 ஆயிரத்தை வழங்கவும் தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.