பாலியல் வழக்கு: குறைந்த தண்டனை கோரி நீதிபதியிடம் கெஞ்சிய பிரஜ்வல் ரேவண்ணா
பாலியல் புகார் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.;
பெங்களூரு,
முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேரனும், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மகனுமான முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் புகார் எழுந்தது. மொத்தம் அவர் மீது 4 பாலியல் புகார்கள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு வழக்கில் அவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை வழங்குவதற்கு முன்பு நீதிபதி சந்தோஷ் கஜனன பட், பிரஜ்வல் ரேவண்ணாவிடம் அவரது கருத்தை கேட்டுள்ளார்.
அப்போது பிரஜ்வல் ரேவண்ணா கூறியதாவது:-
நான் பி.இ. மெக்கானிக்கல் படித்துள்ளேன். நான் எப்போதும் தகுதி அடிப்படையில் தேர்ச்சி பெற்றேன். நான் பல்வேறு பெண்களை பலாத்காரம் செய்ததாக சொல்கிறார்கள். பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்கள் யாரும் தாமாக முன்வந்து புகார் அளிக்கவில்லை. அவர்கள் தேர்தலுக்கு 6 நாட்களுக்கு முன்பு வந்து புகார் கூறினர். போலீசார் அந்த பெண்களை திட்டமிட்டு அழைத்து வந்து புகார் அளிக்க வைத்தனர்.
பாலியல் விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் கணவர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ கூறவில்லை. சில வீடியோக்கள் வெளியான பிறகு பாதிக்கப்பட்ட பெண் வந்து புகார் அளித்துள்ளார். கோர்ட்டு வழங்கும் தண்டனையை ஏற்பேன். எனக்கு குடும்பம் உள்ளது. கடந்த 6 மாதங்களாக எனது பெற்றோரை பார்க்கவில்லை. அதனால் எனக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும். அரசியலில் நான் வேகமாக வளர்ந்ததே நான் வாழ்க்கையில் செய்த தவறு.
இவ்வாறு அவர் கூறினார்.