பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீன்; புகார் அளித்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட குற்றவாளி

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட அபுசயீர் சமீபத்தில் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.;

Update:2025-08-03 15:59 IST

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள வசந்த் விகார் பகுதியில் உள்ள அழகு நிலையத்தின் மேலாளராக பணியாற்றி வரும் பெண் ஒருவர் கடந்த ஆண்டு அபுசயீர் சயிபி மற்றும் அமான் சுக்லா ஆகிய 2 பேர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, கைதான அபுசயீர், தன் மீதான வழக்கை வாபஸ் வாங்குமாறு கூறுவதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த பெண் எந்த பதிலும் அளிக்கவில்லை. அதோடு புகாரையும் வாபஸ் வாங்கவில்லை. இதனால் அபுசயீரின் ஆத்திரம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து அபுசயீர் சமீபத்தில் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். இதையடுத்து, தன் மீது புகார் அளித்த பெண்ணை பழிவாங்க முடிவு செய்த அவர், கடந்த மாதம் 31-ந்தேதி, அந்த பெண் ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து சென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார்.

இதில் படுகாயமடைந்த பெண்ணை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அபுசயீரை கடந்த 1-ந்தேதி கைது செய்து, அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்