ஆந்திரா: கிரானைட் குவாரியில் விபத்து - 6 பேர் பலி
இறந்தவர்கள் ஒடிசாவிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என கூறப்படுகிறது.;
அமராவதி,
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள பல்லிகுராவா அருகே ஒரு தனியாருக்கு சொந்தமான கிரானைட் குவாரி செயல்பட்டு வந்தது. இந்த கல் குவாரியில் வழக்கம்போல காலை 9 மணியளவில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்ய தொடங்கினர்.
அப்போது அங்குள்ள பாறைகளை உடைப்பதற்காக வெடிகுண்டுகள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராதவிதமாக பாறைகள் உருண்டு அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் அங்கிருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டனர். அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 8 பேர் நர்சரோபேட்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்கள் ஒடிசாவிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த விபத்து குறித்து ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு விசாரணைக்கு உத்தரவிட்டு, பாதுகாப்பை அதிகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.