மனைவியுடன் பேசியதால் ஆத்திரம்: வியாபாரியை குத்திக்கொன்ற லிவ் இன் காதலி

ஹரிசும், யஷ்மத் கவுரும் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தனர்.;

Update:2025-08-03 13:30 IST

சண்டிகர்,

அரியானா மாநிலம் குருகிராம் பலியாவாஸ் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஸ் (வயது 40). இவர் குருகிராமில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி, விற்கும் வியாபாரம் செய்து வந்தார். இதனிடையே, ஹரிசுக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் 3 பேரும் பலியாவாஸ் கிராமத்தில் வசித்து வரும் நிலையில் ஹரிஸ் குருகிராமில் வசித்து வந்தார்.

குருகிராமில் ஹரிசுக்கு யஷ்மத் கவுர் (வயது 27) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஹரிசும், யஷ்மத் கவுரும் குருகிராமில் வாடகைக்கு வீடு எடுத்து லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தனர்.

யஷ்மத் கவுருடன் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தாலும் ஹரிஸ் அவ்வப்போது பலியாவாஸ் கிராமத்தில் உள்ள தனது மனைவியிடம் செல்போனில் பேசி வந்தார். இதை அறிந்த ஹரிசின் லிவ் இன் காதலி யஷ்மத் கவுர் கண்டித்துள்ளார். மனைவியிடம் பேசுவதை நிறுத்துமாறு ஹரிசிடம் கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஹரிஸ் தனது மனைவிடம் செல்போனில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லிவ் இன் காதலி யஷ்மத் கவுர், ஹரிசை மீண்டும் கண்டித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த யஷ்மத் கவுர், வீட்டில் இருந்த கத்தியை கொண்டு ஹரிசை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஹரிஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து ஹரிசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக யஷ்மத் கவுரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், உயிரிழந்த ஹரிசின் நண்பரான விஜய் என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்