வரதட்சணை கொடுமை: மனைவியை எரித்து கொல்ல முயற்சி - கணவர் வெறிச்செயல்
சுஷ்மாவிடம் மேலும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை வரதட்சணையாக கேட்டு ஸ்ரீமந்த் கொடுமைப்படுத்தி வந்தார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா ஹொசூரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமந்த். தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுஷ்மா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்ததும் சுஷ்மா தனது கணவர் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். திருமணத்தின்போது ஸ்ரீமந்த் கேட்ட வரதட்சணையை சுஷ்மாவின் பெற்றோர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுஷ்மாவிடம் மேலும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை வரதட்சணையாக கேட்டு ஸ்ரீமந்த் கொடுமைப்படுத்தி வந்தார். அதற்கு அவருடைய குடும்பத்தாரும் உடந்தையாக இருந்தனர்.
இதனால் அடிக்கடி சுஷ்மாவுக்கும், அவரது கணவர் ஸ்ரீமந்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த சந்தர்ப்பத்தில் அவர் சுஷ்மாவை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று யாரும் இல்லாத நேரத்தில் சுஷ்மா மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்த ஸ்ரீமந்த் அவரை கொலை செய்ய முயன்றார். தீயில் கருகிய சுஷ்மாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஹாசன் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து சக்லேஷ்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீமந்திடம் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.