பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பீகாரில் எதிர்க்கட்சிகளிடம் குற்றச்சாட்டுகள் மட்டுமே உள்ளன. ஆதாரங்கள் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.;

Update:2025-08-03 17:45 IST

புதுடெல்லி,

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி நடைபெற்றது. 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள், தங்கள் குடியுரிமையை நிரூபிக்க ஆவணங்களை அளிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆனால், இந்தப் பணிக்கு தேர்தல் ஆணையம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்நிலையில், ஒரு மாத காலமாக நடந்த திருத்தப் பணி முடிந்த நிலையில், நேற்று தேர்தல் ஆணையம் பீகாருக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். அப்போது, "வரைவு வாக்காளர் பட்டியலில் என்னுடைய பெயர் விடுபட்டுள்ளது. இதனால், நான் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும். இதுபோல ஏராளமானவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. ஐ.ஏ.எஸ். அதிகாரி தம்பதியின் பெயர் கூட விடுபட்டுள்ளதாகக் கேள்விப்பட்டேன்" என்றார்.

இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "தேஜஸ்வி யாதவ் கூறிய குற்றச்சாட்டு தவறானது. வரைவு வாக்காளர் பட்டியலில், 204-வது வாக்குப் பதிவு மையத்தில் 416-வது வரிசை எண்ணில் தேஜஸ்வியின் பெயர் இடம்பெற்றுள்ளது. பாட்னா ஆட்சியர் இதை உறுதி செய்துள்ளார். முன்பு, 171-வது மையத்தில் 481-வது வரிசை எண்ணில் தேஜஸ்வியின் பெயர் இடம்பெற்றிருந்தது" என்று கூறியது.

இந்நிலையில், இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருந்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தேஜஸ்வி யாதவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது: "உங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் RAB0456228 ஆகும். ஆனால், நீங்கள் நேற்று செய்தியாளர் சந்திப்பில் காட்டிய அடையாள அட்டையில் RAB2916120 என்ற எண் உள்ளது. முதல் கட்ட விசாரணையில், நீங்கள் காட்டிய வாக்காளர் அடையாள அட்டை எண் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே, உங்கள் அடையாள அட்டையின் அசலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அப்போதுதான் முழுமையாக விசாரிக்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்