மோசமான வானிலை; அமர்நாத் யாத்திரை முன்கூட்டியே நிறுத்தம்
மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டது.;
ஸ்ரீநகர்,
காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் இமையமலையில் 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்தகுகை கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ஜம்முவில் இருந்து கடந்த மாதம் 3-ந் தேதி தொடங்கியது.
வருகிற 9-ந் தேதி வரை 38 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.தற்போதுள்ள படைகளுக்கு கூடுதலாக 600-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை வீரர்கள் யாத்திரை சென்று வருபவர்களின் பாதுகாப்புக்காக ஈடுத்தப்பட்டு இருந்தனர்.
இந்தநிலையில் அமர்நாத் யாத்திரை அதன் திட்டமிடப்பட்ட தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இன்று நிறுத்தப்பட்டது. தொடர்ச்சியாக நிலவிய மோசமான வானிலை மற்றும் யாத்திரை பாதைகள் மோசமடைந்ததால் யாத்திரை முன்கூட்டியே நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.