ஜம்மு காஷ்மீர்: என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஆபரேஷன் அகல் என்ற பெயரில் கடந்த 3 நாட்களாக நடந்து வரும் இந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்;
ஸ்ரீநகர்,
பகல்காம் தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. பயங்கரவாதிகளை தேடி கண்டு பிடிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள், உள்ளூர் போலீசார்கூட்டாக இணைந்து அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். நீண்ட நேரமாக அவர்களுக்கு இடையில் துப்பாக்கி சண்டை நடந்தது. ஆபரேஷன் அகல் என்ற பெயரில் கடந்த 3 நாட்களாக நடந்து வரும் இந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் படுகாயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடி கண்டுபிடிப்பதற்காக அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் முகாமிட்டு தேடி வருகின்றனர்.