ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களை கொடூரமாக தாக்கிய ராணுவ அதிகாரி; விமான நிலையத்தில் பரபரப்பு
ஸ்ரீநகர் விமான நிலையத்தில், லக்கேஜ் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஸ்பைஸ்ஜெட் ஊழியர் மீது ராணுவ அதிகாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் கடந்த 26 ஆம் தேதி ராணுவ அதிகாரி ஒருவர் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்து இருக்கிறார். பயணத்தின் போது அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் உடைமகளை அவர் எடுத்து வந்துள்ளர். இதனால், ராணுவ அதிகாரியை அனுமதிக்க மறுத்த ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள், கூடுதல் லக்கேஜிற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதனால், ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களுக்கும் ராணுவ அதிகாரிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபத்தின் உச்சிக்கு போன ராணுவ அதிகாரி, ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களை சரமாரியாக தாக்கியுள்ளர். இதில் ஸ்பைஸ் ஜெட் ஊழியர்கள் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக்காட்சிகள் பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனுமதி வழங்கப்பட்டுள்ள எடையை விட இரண்டு மடங்கு அதிகம் எடுத்து சென்ற பயணியிடம் ஊழியர்கள் அது பற்றி கேட்ட போது , பயணி கடுமையாக தாக்கியுள்ளார். இது விமானப் பாதுகாப்பு விதிமுறைகளின் கடுமையான மீறலாகும்.காயமடைந்த அனைத்து பணியாளர்களும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது கடுமையான காயங்களுக்கு மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
ஒருவருக்கு முதுகெலும்பு முறிந்துள்ளது. இன்னொருவருக்கு தாடை உடைந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. ராணுவமும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விமான ஊழியர்களை தாக்கிய ராணுவ அதிகாரியின் அடையாளம் தெரியவந்துள்ளது. அவரது பெயர் ரிதேஷ்குமார் சிங் என்பதாகும்.