பாலியல் வன்கொடுமையை தவிர்க்க வீட்டிலேயே இருங்கள்; குஜராத் போக்குவரத்து போலீசார் ஒட்டிய போஸ்டர்
போக்குவரத்து போலீசார் சார்பில் சாலைப்பாதுகாப்பு தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.;
காந்தி நகர்,
குஜராத் மாநிலம் அகமதாபாத் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலைப்பாதுகாப்பு தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அந்த போஸ்டர்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமையை தவிர்க்க வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத் போக்குவரத்து போலீஸ் சார்பில் ஒட்டப்பட்ட அந்த போஸ்டர்களில், நள்ளிரவு நேரங்களில் நடைபெறும் பார்ட்டிகளில் பங்கேற்காதீர்கள், நீங்கள் பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படலாம். இருட்டான ஆள்டமாட்டமற்ற பகுதிகளுக்கு பெண் நண்பர்களை ஆண் நண்பர்கள் அழைத்து செல்ல வேண்டாம்.
அங்கு உங்கள் பெண் நண்பர்கள் பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் என்ன ஆகும்? இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாலியல் வன்கொடுமையை தவிர்க்க பெண்கள் வீட்டிலேயே இருக்கும்படி குஜராத் போக்குவரத்து போலீசார் ஒட்டிய போஸ்டர்கள் மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதேவேளை, சாலைப்பாதுகாப்பு தொடர்பாக போக்குவரத்து போலீசார் சார்பில் நோட்டீஸ் ஒட்ட தனியார் தொண்டு அமைப்பிற்கு அனுமதி கொடுக்கப்பட்டதாகவும், அந்த அமைப்பு அனுமதியின்றி பெண்கள் பாதுகாப்பு குறித்து சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம்பெற்ற போஸ்டர்களை ஒட்டியதாகவும் அகமதாபாத் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், சம்மந்தப்பட்ட தொண்டு அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமையை தவிர்க்க பெண்கள் வீட்டிலேயே இருக்குமாறு போக்குவரத்து போலீசார் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.