மக்களவைத் தேர்தலில் முறைகேடு - ஆதாரத்தை வெளியிட போவதாக ராகுல்காந்தி ஆவேசம்

முறைகேடுகள் நடக்காமல் இருந்திருந்தால், மோடி மீண்டும் பிரதமராக வந்திருக்க மாட்டார் என ராகுல்காந்தி பேசினார்.;

Update:2025-08-02 13:36 IST

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது;

"தேர்தல் முறை பற்றி நான் சமீப நாட்களாக பேசி வருகிறேன். 2014 ஆம் ஆண்டிலிருந்தே ஏதோ தவறு இருப்பதாக எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருந்தது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஏற்கனவே எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

நாங்கள் பேசும் போதெல்லாம், மக்கள், "எங்கே ஆதாரம்?" என்று கேட்டார்கள். பிறகு, மகாராஷ்டிராவில் ஏதோ நடந்தது. மக்களவை தேர்தலில் நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றோம். பின்னர் 4 மாதங்களுக்குப் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தோற்றுவிட்டோம். இதன் பின்னரே தேர்தல் முறைகேடுகளை நாங்கள் தீவிரமாகத் தேடத் தொடங்கினோம்.

மகாராஷ்டிராவில், மக்களவை தேர்தலுக்கும், சட்டமன்ற தேர்தலுக்கும் இடையில் 1 கோடி புதிய வாக்காளர்கள் இருப்பதைக் கண்டறிந்தோம். அந்த வாக்குகளில் பெரும்பாலானவை பாஜகவுக்குச் செல்கின்றன. இப்போது நான் எந்த சந்தேகமும் இல்லாமல் எங்களிடம் ஆதாரம் உள்ளது என்று சொல்கிறேன். இந்த ஆதாரத்தைக் கண்டுபிடிக்க 6 மாதங்கள் இடைவிடாமல் உழைத்தோம். மக்களவைத் தேர்தல் எப்படி திருடப்படுகிறது என்பதை நீங்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் பார்ப்பீர்கள். 6.5 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள், அந்த வாக்காளர்களில் 1.5 லட்சம் பேர் போலியானவர்கள். மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 15-ல் இருந்து அதிகபட்சமாக 100 தொகுதிகள் வரை முறைகேடு நடந்திருக்கலாம். அரசியலமைப்பை காக்க வேண்டிய தேர்தல் ஆணையம் கைப்பாவையாக மாறிவிட்டது.

மக்களவைத் தேர்தலில் 15 தொகுதிகளில் முறைகேடுகள் நடக்காமல் இருந்திருந்தால், மோடி மீண்டும் பிரதமராக வந்திருக்க மாட்டார். மிகக் குறைந்த பெரும்பான்மையுடனே இந்தியாவின் பிரதமராகியுள்ளார் மோடி. இந்தியாவில் தேர்தல் முறை இறந்துவிட்டது. தேர்தலில் முறைகேடு செய்ய முடியும். மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு எவ்வாறு மோசடி செய்தது என்பதை இன்னும் சில நாட்களில் ஆதாரத்துடன் நிரூபிக்கப் போகிறோம்."

இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்