கேரளாவில் பள்ளி விடுமுறையில் மாற்றம்?

ஜூலை மாதத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டியுள்ளதால் ஆண்டு விடுமுறையில் மாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.;

Update:2025-08-01 15:44 IST

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். சமீபத்திய ஆண்டுகளில் கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகி வருவதால் விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திறக்கும் போது பல சிக்கல்கள் எழுகின்றன. மழைக் காலங்களில் அந்தந்த மாவட்டங்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில்,

கேரளாவில் பள்ளிகளின் ஆண்டு விடுமுறையை ஏப்ரல் - மே மாதங்களுக்கு பதிலாக வேறு மாதத்திற்கு மாற்ற அம்மாநில அரசு திட்டமிட்டு வருகிறது.

கேரள மாநிலத்தில் அதிக மழைப் பொழிவு எப்போதும் இருக்கும். இதனால், கேரளத்தில் மழைக் காலங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன.

இதனால், கேரள மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மழைக்கால உள்ளூர் விடுமுறைகள் அதிகமாக விடப்படும் சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில், கோடைக் காலமான ஏப்ரல், மே மாதங்களுக்கு பதிலாக மழைக் காலங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து கேரள பள்ளிக் கல்வித்துறை மந்திரி வி.சிவன் குட்டி சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளார்.

இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை மந்திரி சிவன் குட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கேரள மாநிலத்தில் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. இந்த மாதங்களில் மாநிலத்தில் கடும் வெப்பம் இருக்கும் என்பதால் குழந்தைகளுக்கு சிரமம் ஏற்படுகிறது உண்மைதான். அதேசமயம், மழைக் காலமான ஜூன், ஜூலை மாதங்களில் பெய்யும் பலத்த மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டிய நிலை உள்ளது..

விடுமுறை குறித்து பொதுமக்கள் உங்களுடைய கருத்துகளையும், வழிகாட்டுதலையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் என்ன நன்மைகள், தீமைகள் உள்ளன. குழந்தைகளின் படிப்பையும் ஆரோக்கியத்தையும் இது பாதிக்குமா? ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் இது நடைமுறையில் சாத்தியப்படுமா. பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் உள்ள விடுமுறை காலங்களில் இருந்து வித்தியாசமாக நாம் எப்படி முன்மாதிரியாக மாறலாம் என்பது போன்ற உங்கள் வழிகாட்டுதல்கள் மற்றும் கருத்துக்களை பதிவிடுங்கள். ஆக்கப்பூர்வமான விவாதத்தை தொடங்க இது உதவியாக இருக்கும் என நம்புகிறேன் என அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்