பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-08-01 15:26 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சியின் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா. இவர், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் ஆவார். இவருடைய தந்தை முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா ஆவார். இந்த நிலையில், வேலைக்கார பெண் உள்பட 4 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதுபற்றி சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்குகளில் பிரஜ்வல் ரேவண்ணா போலீசாரால் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த 4 வழக்குகளில் மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகரை சேர்ந்த வேலைக்கார பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெங்களூரு சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்திருந்த வழக்கும் ஒன்றாகும்.

இந்த வழக்கில் விசாரணையை முடித்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு கோர்ட்டில் அந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. கடந்த 18-ந் தேதியே இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பு ஆகஸ்டு 1-ந் தேதி (அதாவது இன்று) அறிவிப்பதாக நீதிபதி சந்தோஷ் கஜனன பட் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது. தீர்ப்பை கேட்டு கதறி அழுதபடியே நீதிமன்ற அறையில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா வெளியேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்