காதலனுடன் வாக்குவாதம்.. ஆற்றில் குதித்த இளம்பெண்ணை தேடும் பணி தீவிரம்
கனமழை காரணமாக தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மீட்புப் படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.;
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூரை சேர்ந்த சுமித்ரா பிரமானிக்(18) என்ற இளம்பெண்ணும், அவரது தோழியும் கர்காய் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது சுமித்ரா தனது காதலனுடன் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் சுமித்ராவுக்கும், போனில் பேசிய அவரது காதலனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுமித்ரா, கண் இமைக்கும் நேரத்தில் தன் தோழியிடம் இருந்து விலகிச் சென்று பாலத்தின் தடுப்பு மீது ஏறி ஆற்றுக்குள் குதித்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தோழி, சுமித்ராவை காப்பாற்றுமாறு கதறி அழுதார்.
அங்கிருந்த பொதுமக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், சுமித்ராவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தற்போதுவரை சுமித்ராவை கண்டுபிடிக்க முடியவில்லை. கனமழை காரணமாக தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மீட்புப் படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.