102 நாட்கள், ரூ.19 கோடி... 'டிஜிட்டல் கைது' மோசடியால் பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடுமை
பெண் மருத்துவர் சுமார் ரூ.19 கோடி பணத்தை மோசடிக்காரர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.;
காந்திநகர்,
சமீப காலமாக 'டிஜிட்டல் கைது' என்ற மோசடி வலையில் சிக்கி பலர் தங்கள் பணத்தையும், நிம்மதியையும் இழந்து வருகின்றனர். 'டிஜிட்டல் கைது' என்பது, மோசடி கும்பல் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளை போல பேசி பொதுமக்களை வீட்டில் சிறை பிடித்து பணம் பறிப்பதாகும். இதுபோன்ற 'டிஜிட்டல் கைது' மோசடிகள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன.
அந்த வகையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த மூத்த பெண் மருத்துவர் ஒருவரை மோசடிக்காரர்கள் சுமார் 3 மாதங்களாக 'டிஜிட்டல் கைது' செய்து வைத்திருப்பதாக கூறி ஏமாற்றி, அவரிடம் இருந்து சுமார் ரூ.19 கோடி பணத்தை பறித்துள்ளனர். மோசடி வலையில் சிக்கி பணத்தை இழந்த பெண் மருத்துவர், இறுதியாக காவல்துறையிடம் கடந்த வாரம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
அதன்படி, கடந்த மார்ச் மாதம் பெண் மருத்துவருக்கு ஒரு மொபைல் அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் ஜோதி விஸ்வநாத் என்ற பெயரில் ஒரு பெண் பேசியுள்ளார். அவர் தொலைதொடர்புத்துறையில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பேசிய நபர்கள் தங்களை சப்-இன்ஸ்பெக்டர் மோகன் சிங், அரசு வழக்கறிஞர்கள் தீபக் சயினி மற்றும் வெங்கடேஷ்வர் என்று அறிமுகம் செய்துள்ளனர்.
இவ்வாறு அடுத்தடுத்து அரசு அதிகாரிகள் போலவும், காவல்துறை மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் போலவும் பல பேர் பெண் மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதனால் ஒரு மிகப்பெரிய விசாரணை வளையத்திற்குள் சிக்கிவிட்டோம் என பெண் மருத்துவர் நம்ப தொடங்கிவிட்டார். அது மட்டுமின்றி அமலாக்கத்துறை அலுவலகத்தின் முத்திரை பதித்த ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் மோசடிக்காரர்கள் பகிர்ந்துள்ளனர்.
பெண் மருத்துவர் மீது பணமோசடி புகார் இருப்பதாக கூறிய அவர்கள், அவரது சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு கேட்டுள்ளனர். அவர்கள் கேட்ட விவரங்களை கொடுத்த பின்னர், பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை டெப்பாசிட் செய்யுமாறு கூறியுள்ளனர். விசாரணை முடிந்த பிறகு பணம் திருப்பி அனுப்பப்படும் என்று அவர்கள் கூறியதை நம்பி, பெண் மருத்துவர் தனது வங்கி கணக்கில் இருந்த பணத்தை கொடுத்தது மட்டுமின்றி, தனது தங்க நகைகள், வர்த்தக பங்குகள் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து சுமார் 19 கோடி ரூபாய் பணத்தை மோசடிக்காரர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இவ்வாறாக 102 நாட்கள் 'டிஜிட்டல் கைது' மோசடியில் சிக்கி பெரும் துன்பத்திற்கு ஆளான பெண் மருத்துவர், இறுதியாக இது ஒரு மோசடி வலை என்பதை உணர்ந்து கொண்டு, காவல்துறையினரிடம் சென்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சந்தேகத்தின்பேரில் லால்ஜி ஜெயந்திபாய் பல்தானியா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மோசடியில் கம்போடியா நாட்டை சேர்ந்த சைபர் கிரைம் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கம்போடியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இயங்கி வரும் சைபர் மோசடி கும்பல்களால் இந்தியர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 கோடியை இழந்து வருவதாக உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் சமீபத்திய பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.