இந்தியா குறித்து டிரம்ப் ஆதாரமற்ற குற்றச்சாட்டு; மவுனம் கலைப்பாரா மோடி? - மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி

இந்திய பொருட்களுக்கு நாளை முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார்.;

Update:2025-07-31 18:25 IST

புதுடெல்லி,

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளை தொடர்ந்து எச்சரித்து வருகிறார். ஏற்கனவே, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை, வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அழைப்பு விடுத்த டிரம்ப், ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாவிட்டால் அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார்.

இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20 முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என இந்தியாவுக்கு டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்கான காலக்கெடு இன்றோடு முடிவடையும் நிலையில், புதிய வரிவிதிப்பு முறையை நேற்று டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதன்படி வெள்ளிக்கிழமை(நாளை) முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார்.

அதோடு, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்வதற்காகவும் இந்தியாவிற்கு அபராதம் விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார். இதனிடையே தனது சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ""ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. ஏற்கனவே வீழ்ந்த தங்கள் பொருளாதாரத்தை இருநாடுகளும் சேர்ந்து மேலும் வீழ்ச்சிக்கு கொண்டு செல்கிறார்கள் என்பதே எனது கவலை. இந்தியாவுடன் அமெரிக்கா மிகக் குறைந்த வணிகத்தையே செய்கிறது. அவர்களின் கட்டணங்கள் மிக அதிகம்" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்தியா குறித்து டிரம்ப் கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி மவுனமாக இருக்கப்போகிறாரா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"போர்நிறுத்தம் தொடர்பான டொனால்ட் டிரம்ப்பின் கருத்துகள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மவுன விரதத்தை அனுசரித்தார். தற்போது இந்தியா மீது டிரம்ப் கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து மோடி தனது மவுனத்தை கலைத்து பேசுவாரா?

தேசமே எங்களுக்கு முதன்மையானது. நாங்கள் எப்போதும் தேசத்துடன் இருக்கிறோம். டிரம்ப் நம் மீது 25% வரி மற்றும் அபராதம் விதித்துள்ளார். இது நாட்டின் வர்த்தகத்திற்கு தீங்கு விளைவிக்கும். சிறு, குறு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மோசமாக பாதிக்கப்படுவார்கள். பல தொழில்கள் பெரும் இழப்பை சந்திக்கும்.

உங்கள் மந்திரிகள் பல மாதங்களாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி பேசி வருகின்றனர். அவர்களில் சிலர் பல நாட்கள் வாஷிங்டனில் முகாமிட்டனர். உங்கள் நண்பர் - "நமஸ்தே டிரம்ப்" மற்றும் "அப்கி பார் டிரம்ப் சர்க்கார்" உங்கள் நட்புக்காக நம் நாட்டிற்கு இப்படித்தான் வெகுமதி அளிப்பாரா?

அமெரிக்க ஜனாதிபதி இந்தியா மீதான வரி விதிப்புக்கான காரணத்தை இவ்வாறு கூறியுள்ளார்;-

* ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வது,

* ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஆயுதங்களை வாங்குவது,

* 'பிரிக்ஸ்' அமைப்பில் இந்தியா உறுப்பினராக இருப்பது.

* அமெரிக்க டாலர் மீதான தாக்குதல் என்று கூறப்படும் 'பிரிக்ஸ்' அமைப்பின் நடவடிக்கை.

இது இந்தியாவின் "மூலோபாய சுயாட்சி" என்ற தேசியக் கொள்கைக்கு ஒரு கடுமையான அடியாகும். அணிசேராமை நமது வெளியுறவுக் கொள்கையின் அடித்தளமாக இருந்து வருகிறது என்பது வரலாறு. இந்தியாவில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும், நாட்டின் நலனுக்காக உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுடன் நட்பை வலுப்படுத்தியுள்ளன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின்போது, டாக்டர் மன்மோகன் சிங் அமெரிக்கா உட்பட 45 நாடுகளிடமிருந்து அணு ஆயுத விலக்கைப் பெற்றார். அமெரிக்கா எங்களை ஆதரித்தது. அதற்காக, அவர்கள் தங்கள் சொந்த சட்டத்தை மாற்றிக்கொண்டனர். ஆனால் இந்தியா அமெரிக்காவிடமிருந்து மட்டுமே அணு எரிபொருளையும் பொருட்களையும் பெற வேண்டிய கட்டாயம் இருந்ததில்லை. எங்களுக்கு வாய்ப்புகள் திறந்திருந்தன.

உங்கள் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை நமது தேசியக் கொள்கைக்கு கடுமையான அடியைக் கொடுத்துள்ளது. டிரம்ப் பாகிஸ்தானுடன் எண்ணெய் இருப்பு ஒப்பந்தம் செய்வது பற்றிப் பேசுகிறார். அவர் இந்தியாவை மிரட்டுகிறார். நீங்கள் அமைதியாக உட்கார்ந்திருக்கிறீர்களா?

இந்த புதிய அமெரிக்கா-சீனா-பாகிஸ்தான் கூட்டு பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். விளம்பரத்தைப் பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக, மோடி அரசு நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்