தர்மஸ்தலா மர்ம மரண வழக்கில் திடீர் திருப்பம்.. மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
நேத்ராவதி ஆற்றங்கரையில் தோண்டிய 6-வது குழியில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.;
மங்களூரு,
தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூருவில் இருந்து 72 கிலோ மீட்டர் தொலைவில் தர்மஸ்தலா உள்ளது. இந்த பகுதியில் மாணவிகள், இளம்பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கொன்று புதைக்கப்பட்டதாகவும், பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாகவும் தூய்மை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவர் பகீர் புகார் கூறினார்.
மேலும் அவர் தானே சில எலும்புக்கூடுகளை தோண்டி எடுத்துக் கொண்டு மங்களூரு மாவட்ட கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இ்ந்த மர்ம மரண வழக்கு நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த சம்பவம் தொடர்பாக பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) விசாரணை நடத்த முதல்-மந்திரி சித்தராமையாவிடம் வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதையடுத்து கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாாி பிரணவ் மொகந்தி தலைமையில் எஸ்.ஐ.டி. குழு அமைத்து கடந்த 19-ந்தேதி உத்தரவிட்டது. இந்த விசாரணை குழுவில் 20-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். முதலில் எஸ்.ஐ.டி. அதிகாரிகள் பெல்தங்கடி சென்று, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை போலீசாரிடம் பெற்றுக்கொண்டனர்.
அதன்பிறகு புகார்தாரரான தூய்மை பணியாளரிடம் 2 நாட்களாக சுமார் 15 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவர் நேத்ராவதி ஆற்றங்கரையில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக கூறினார். அதுபோல் மேலும் சிலர் தங்களது குடும்பத்தை சேர்ந்தவர்களை காணவில்லை என்றும் புகார் அளித்தனர்.
இதையடுத்து புகார்தாரரை அழைத்துக்கொண்டு நேத்ராவதி ஆற்றங்கரைக்கு சென்று எஸ்.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் உடல்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக 35-க்கும் மேற்பட்ட இடங்களை அடையாளம் காட்டினார்.
அதில் முதல்கட்டமாக நேத்ராவதி ஆற்றங்கரையில் புகார்தாரர் அடையாளம் காட்டிய 13 இடங்களில் உடல்கள், எலும்புக்கூடுகள் கிடைக்கிறதா என எஸ்.ஐ.டி. அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள், மருத்துவக்குழுவினர் ஆகியோருடன் பெல்தங்கடி தாசில்தார் பிருத்வி சனிகம் முன்னிலையில் கடந்த 29-ந்தேதி குழி தோண்டி தேடுதல் பணியை தொடங்கினர்.
முதல் நாளில் தோண்டிய குழியில் சுமார் 2½ அடி ஆழத்தில் ஒரு பான்கார்டு, ஒரு ஏ.டி.எம். கார்டு, ரவிக்கை (ஜாக்கெட்) கிடைத்ததாக தகவல் வெளியானது. நேற்று முன்தினம் மேலும் 4 இடங்களில் குழி தோண்டி உடல்களை தேடும் பணி நடந்தது. ஆனால் 5 குழிகளிலும் எந்த எலும்புக்கூடுகளும், உடல்களும் கண்டெடுக்கப்படவில்லை. உடல்களை தேடும் பணியின் போது புகார்தாரரையும் பலத்த பாதுகாப்புடன் எஸ்.ஐ.டி. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று அவரது முன்னிலையில் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் 3-வது நாளாக நேத்ராவதி ஆற்றங்கரையில் உடல்களை தேடும் பணி நேற்று காலை 9 மணி முதல் தொடங்கியது. இதற்காக புகார்தாரரும் முகமூடி அணிந்தபடி அங்கு வந்திருந்தார். பெல்தங்கடி தாசில்தார், எஸ்.ஐ.டி. அதிகாரிகள் முன்னிலையில் நேற்று 6-வது இடத்தில் குழி தோண்டும் பணி தொடங்கியது. அந்த சமயத்தில் அப்பகுதியில் மழையும் பெய்தது. கொட்டும் மழையிலும் 6-வது இடத்தில் குழி தோண்டும் பணி பொக்லைன் எந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சுமார் 5 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடுகள் கிடைத்தன. 2 மண்டை ஓடுகளும், 12 சிறிய சிறிய எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன. இதில் கை, கால் எலும்புகள் துண்டாகிய நிலையில் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை எஸ்.ஐ.டி. விசாரணை குழு தலைவரான பிரணவ் மொகந்தி அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். மேலும் உள்ளாடை கிளிப் ஒன்றும் அந்த குழியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் அந்த மண்டை ஓடுகள், எலும்புகளை மீட்டு பாலிதீன் பைகளில் சுற்றி உடனடியாக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். கண்ெடடுக்கப்பட்ட மண்டை ஓடுகளில் ஒன்று ஆணுக்குரியது என்றும், மற்றொன்று பெண்ணுக்குரியது என்றும் கூறப்படுகிறது.
2 மனித எலும்புக்கூடுகள் சிக்கியுள்ளதால் தர்மஸ்தலா மர்ம மரண வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2 எலும்புக்கூடுகளும் யாருடையது என்பதை கண்டறிய மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து புகார்தாரர் அடையாளம் காட்டிய மற்ற 8 இடங்களிலும் உடல்களை தோண்டி எடுக்கும் பணியை தீவிரப்படுத்த எஸ்.ஐ.டி. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 6-வது இடத்தில் குழி தோண்டிய பகுதியில் இருந்து சுமார் 30 அடி தொலைவில் தான் உடல்கள் இருப்பதாக அடையாளம் காட்டப்பட்ட 7-வது இடம் இருக்கிறது. 7-வது இடத்தில் குழி தோண்ட பெல்தங்கடி உதவி கலெக்டரிடம் எஸ்.ஐ.டி. அதிகாரிகள் அனுமதி கேட்டனர். இதற்கிடையே அப்பகுதியில் நேற்று பிற்பகலுக்கு பிறகு மழை தீவிரமாக கொட்டியது. இதனால் உடல்களை தோண்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதால் தர்மஸ்தலா மர்ம மரண வழக்கில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.