அமெரிக்கா நியாயமற்ற கோரிக்கைகளை வைத்தால் ...காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கருத்து

Update:2025-07-31 21:17 IST

புதுடெல்லி,

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இரண்டு நாட்களில் அமெரிக்காவின் பரஸ்பர வரி காலக்கெடு முடிவடையும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில மாதங்களுக்கு முன்பு பல நாடுகள் மீது வரிகளை அறிவித்திருந்தார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு அனுமதிக்க அதை நிறுத்தி வைத்தார். இந்தநிலையில் ட்ரூத் சமூக வலைத்தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரியை விதிக்கும்" என்று அறிவித்துள்ளார்.

டிரம்பின் இந்த அறிவிப்பு இந்திய தொழில் நிறுவனங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பு குறித்து கவனத்தில் எடுத்துள்ளதாகவும், இந்த வரிவிதிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கிடையே, இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி சசிதரூர் கூறியதாவது:- பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும்போது இது ஒரு பேரம் பேசும் உத்தியாக இருக்கலாம்.. அமெரிக்கா நமக்கு பெரிய சந்தையாகும். ஏற்றுமதி மட்டும் சுமார் 87-90 பில்லியன் டாலர்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் கோரிக்கைகள் முற்றிலும் நியாயமற்றவையாக இருந்தால், அதை எதிர்க்க எல்லா உரிமைகளும் உள்ளன.

இந்தியா பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பிரிட்டனுடன் ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. அடுத்ததாக ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. சீனாவைப் போல ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் இந்தியாவுக்கு இல்லை. இதுவே நமது வலிமை. நமக்கு வலுவான உள்நாட்டு சந்தை உள்ளது. நமது பேச்சுவார்த்தைக்குழுவிற்கு வலுவான ஆதரவு தேவை. நல்ல ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை எனில், நாம் விலகுவது சிறந்தது" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்